ராமாயணமும் நாமும்
ராமாயணம் என்னும் ஆதிகாவியத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
நீ செய்யும் கர்மாவின் வினைப்பயனுக்கு நீயே தான் பொறுப்பு
வால்மீகி:- ரத்னாகர் வேடனாக பல குற்றங்களை செய்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தைகாப்பாற்றிக்கொண்டிருக்கிறான். தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அளவற்ற நம்பிக்கை. தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் தன் செல்வத்தை பகிர்ந்து கொள்வதை போல இதையும் பகிர்ந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறான். அப்போது வந்த நாரதரை கொள்ளை அடிக்க நெருங்குகிறான்.
அப்போது நாரதர் கேட்கிறார்,"நீ யார் பொருட்டு இந்த கொள்ளை தொழிலை கைக்கொண்டுள்ளாய்?"
"ஏன் என் குடும்பத்திற்காகத்தான்"என்று பதிலளிக்கிறான்
அப்படியானால் நீ ஒன்று செய், என்னை இங்கேயே கட்டி போட்டுவிட்டு,உன் குடும்பத்தாரிடம் சென்று, கொள்ளையடிப்பதால் வரும் பாபத்தை பகிர்ந்து கொள்வார்களா என்று கேள்.அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் வந்து சொல் என்கிறார்.
வேடனும் சென்று நாரதர் கேட்கக் சொன்ன மாதிரியே போய் கேட்க,அவர்கள் நீ எந்த வழியில் சம்பாதிக்கிறாய் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை, அது உன் கடமை.அதற்காக உன் செயலால் விளையும் பாபத்தையெல்லாம்பங்குபோட்டுக்கொள்ளமுடியாது.என்று கூற வேடன் உண்மையை உணர்ந்து வால்மீகியாகிறான் என்பது தான் கதை.
சரி ! இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால் நாம் குடும்பத்தின் மீது பாசம் வைத்திருக்கலாம். அதற்காக அவர்களை மகிழ்விப்பதற்காக தவறான வழியில் பணம் சம்பாதித்தால், அதன் விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டும். உன்னால் பலன் பெற்றவர்கள் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்பதுதான் உண்மை. இதை நம்மில் பலரும் உணர்வதில்லை. மனைவியையும் குழந்தைகளையும்சந்தோஷப்படுத்துவதற்காக, பலரது வயிற்றெரிச்சல் சாபங்களையும் பெற்றுக்கொண்டு லஞ்சம் வாங்குகிறார்கள். பெற்றவர்களிடம் ஏமாற்றி அவர்களின் சொத்தையெல்லாம்,அபகரித்துக், அவர்களை நடுரோட்டில் விட்டுவிடுவதால், பின் விளைவுகளை சந்திக்கிறார்கள்.
ஆகவே பெற்ற குழந்தைக்காக,அல்லது பிறசொந்தத்திற்காகவோ, தவறான வழியில் சென்றால் யாரும் உன் கர்மாவை பங்கு போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பதனை அறிக.
ராமன்:- மூத்த பிள்ளையாக பிறந்த இவன் தன் பெற்றோரிடத்தும்,உடன் பிறந்திருந்தாலும் எப்படியெல்லாம் நடந்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம். சகோதர ஒற்றுமைக்கு இவர்களே சாட்சி.
இன்றைய வாழ்க்கையில் உடன் பிறந்தவர்களுக்கு, சொத்துக்காகவும், இன்ன பிற உரிமைகளுக்காகவும், கோர்ட் படி ஏறுவதற்கு கூட தயங்குவதே இல்லை. இதனால் குடும்பங்கள் சீரழிவுகள் மிச்சம். கஷ்ட காலத்தில் உதவுவதற்கு ஒருவரும் இருப்பதில்லை.
ஒற்றுமையே பலம்,ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
லட்சுமணன்:- அண்ணனுக்காக எந்த பெரிய தியாகத்தையும் செய்ய தயங்கவில்லை.
ராமாயணத்தில் வரும் சகோதரர்களிடம் தான் பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதனை கற்றுக்கொள்ள வேண்டும்.
சீதை:-ஒரு மனைவி தன் கணவனிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்.சிறையில் இருந்த போது தன கணவன் எப்படியும் தன்னை வந்து காப்பாற்றுவான் என்ற உறுதியில், தன்மகனாக நினைத்த அனுமன் அவளை தன் தோள் மீது தூக்கி கொண்டு ராமனிடம் சேர்த்துவிடுகிறேன் என்று கூறியதை ஏற்க மறுத்துவிட்டாள்.அது சூரிய வம்சபெருமைக்கு ஏற்புடைய செயல் அல்ல என்று நினைத்தாள்
இப்படித்தான் ஒவ்வொரு மனைவியும் தன் கணவன் மீது நம்பிக்கையும் அன்பும் வைக்க வேண்டும். தான் புகுந்த வம்ச பெருமையை காக்க வேண்டும்.
இராவணன்,கைகேயி:- இவர்கள் இருவரும் அடுத்தவர் பேச்சை கேட்காதவரை நல்லவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் சூர்ப்பனகை சொன்னதை ஆராயாமல் நம்ப ஆரம்பித்ததுடன் ,அவன் பராக்கிரமம்,நல்ல அரசன், சிறந்த சிவபக்தன் என்ற பெயர், எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.இது எல்லாம் சூர்ப்பனகை தன் கணவனை ராவணன் கொன்றதற்கான பழி வாங்கிய செயல் என்பதனை பிறன் மனைமேல் ஏற்பட்ட மோகத்தால் என்பதனை அறிய மறந்து விட்டான்.
பிறர் பேச்சை ஆராயாமல் செயல்படக்கூடாது
இப்படித்தான் கூனி ராமனை பழி வாங்குவதற்காக,கைகேயிக்குதுர்போதனை செய்து அவளது மனதை மாற்றினாள் இதற்கு முன் இவளை போல் ராமனை நேசித்தவர் கிடையாது.
இக்காலத்தில் தம் சுய நலத்திற்காக துர் போதனை செய்து எத்தனை, எத்தனை குடும்பங்கள் அழிந்து பட்டு போகின்றது!. இவையெல்லாம் தம் சுய புத்தியை கொண்டு பிறர் சொல்வதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதனாலே தான்.
இக்காலத்தில,மந்திரையும், இராவணனும் மலிந்து தான் கிடக்கிறார்கள்,நாம் தான் பின் விளைவுகளை யோசித்து அவர்களை ஒதிக்கி தள்ளி விட்டு, ராம,லக்ஷ்மணர்களைப்போல் வாழ்ந்து நம் குடும்பத்திற்கு மரியாதையையும், புகழையும் சேர்க்க வேண்டும் என்றால், இராமயணத்தையும், அதன் சிறப்புகளையும், நம் வளரும் இளைய சமுதாயத்திற்கு கற்றுகொடுங்கள்.
Comments
Post a Comment