கர்மா
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்--என்பது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. ஆம்! நாம் என்ன விதைக்கிறோமோ அது தானே விளையும். சோளத்தை விதைத்து விட்டு நெல்லை அறுவடை செய்ய நினைத்தால் நடக்குமா? அது போலத்தான் நாம் செய்யும் வினைப்பயன்களும்.
மறுபிறவியில் நம்பிக்கை உள்ளதோ, இல்லையோ, இந்த பிறவியிலேயே பல நிகழ்வுகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
அரசன் அன்றே கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும். ஆம்!நாம் செய்யும் தவறுகள்தெரியவந்தால் அரசிடமிருந்து தண்டனை உடனே கிடைத்து விடும். ஆனால் தெய்வத்திடம் எந்த தவறையும் மறைக்க முடியாது. செய்த தவறுக்கானகூலியை பெற்றே ஆக வேண்டும்.
கர்மாவும் மனமும்:-
கர்மாவிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது எப்படி? மனம் ஆசையின்படி நடக்கிறது. இன்று நான் பலருக்கும் பயன்படும் படியாக, ஒரு கல்விக்கூடத்தையோ, அல்லது சமுதாய கூடத்தை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அது நல்ல கர்மா. பக்கத்து வீட்டுக்காரன் சொத்தையும் அபகரிக்க வேண்டும் என்று நினைத்தால் அது கெட்ட கர்மா. இரண்டு செயல்களும் மனதில் ஏற்படும் ஆசையே. அந்த ஆசையின் படி மனம் செயல்படுகிறது. இந்த ஆசைகளை இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடையான புத்தியைக் கொண்டு பாகுபடுத்தி செயல்படுத்தவேண்டும். தகாத ஆசைகளை தடுத்து நிறுத்தும் சக்தி நம் அறிவிற்கு உண்டு.
ஆகையால் தான் ஸ்வாமி விவேகநந்தர் தன் கஷ்டங்களை நீக்கும்படி தன் குரு ராமகிருஸ்ணரிடம் கேட்கும் போது, அவர் "நீயே காளியிடம் நேரடியாக சென்று கேள் என்று அனுப்புகிறார்.மூன்று முறை செல்கிறார்.கேட்க வந்ததை கேட்காமல், "எனக்கு நல்ல புத்தியைகொடு, ஞானத்தை கொடு, வைராக்கியத்தை கொடு" என்றுதான் கேட்க முடிந்தது.
வைராக்கியம் இருந்தால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி தான். நல்லறிவு,ஞானமும் வளர்வதற்கு வைராக்கியம் மிக அவசியம்.
விவேகானந்தர் கேட்ட அந்த மூன்றும் இருந்தால் மனதை நம் கட்டுக்குள் வைத்து விடலாம். மனம் நம் கட்டுக்குள் இருந்தால் , கர்மாவை குறைத்துவிடலாம். கர்மாக்கள் குறைந்தால் பிறவிகளும் குறையும்.
கர்மாக்கள் ஏற்பட காரணம்:-
பஞ்ச பூதங்களே கடவுள் என்றால், பஞ்சபூதங்களால் ஆன இந்த உடலுக்குள் இருப்பதும் இறைவன் தானே! பின் ஏன் இத்தனை கஷ்டங்கள். கஷ்டங்களை கடவுள் கொடுப்பதில்லை, அவை யாவையும் நாம் தான் தேடிக்கொள்கிறோம். எப்படி?
மனசாட்சியாக நம்முள் இருக்கும் இறைவன் நாம் தவறு செய்ய முனையும் போது இது தவறு என்று சுட்டிக்காட்ட தவறுவதே இல்லை. நாம் தான் அதை புறம்தள்ளி விட்டு,மனம் போன போக்கில் தவறு செய்கிறோம். அவ்வை பாட்டி சொன்னாள்,
மனம் போன போக்கில் போக வே9ண்டாம்.
ஏனெனில் அது மாறிக்கொண்டே இருக்கும். தெரிந்தே தவறு செய்தால், உனக்கு மனசாட்சியே இல்லையா ? என்று தானே கேட்கிறோம்? கொலைகாரனுக்கும் மனசாட்சி உண்டு. பின் ஏன் கொலை செய்கிறான்? அவன் மனசாட்சியின் குரலை அலட்சிய படுத்திவிட்டு தான் செய்யும் செயலை நியாயப்படுத்துகிறான்.
மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. மனதை செம்மை படுத்த சான்றோர்கள், பெரியவர்கள் வாக்கை பின்பற்ற வேண்டும். சத்சங்கங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
மனம் ஏனைய புலன்களை அடக்கியாளும் வலிமை பெற்றது.இதற்கு கல்வி அவசியம்.மனதை அடக்க வைராக்கியம் அவசியம்
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.
எந்த சாட்சியும் உணர்த்த முடியாத குற்றத்தின் அழுத்தத்தை உணர்த்துவது மனம்.
தந்நெஞ்சறிவது பொய்யல்ல
பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னை சுடும்.
நமது நெஞ்சு எப்போதும் பொய் கூறுவதில்லை. அதை விடுத்து பொய் கூறினால், மற்றவர்கள் தண்டிக்க வேண்டியதில்லை.அவரவர் நெஞ்சே தண்டித்துவிடும்.
இங்கே நெஞ்சு என்று குறிப்பிடுவது இறைவன் உறையும் மனசாட்சியைதான்.
ஆகவே மனசாட்சி படி வாழ்ந்தால் கர்மாக்கள் குறைந்து, பிறவிகளும் குறையும் என்பது மறுக்கப்படாத உண்மை.

Comments
Post a Comment