பணம் படுத்தும் பாடு
அமுதா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தாள். தன் ஒரே பேரனுக்கு விடிந்தால் கல்யாணம். மனம் விச்ராந்தியாக கிடக்க என்ன காரணம்? இதுதான் அவளது சிந்தனை. பேரன் மிகுந்த புத்தி உள்ளவன். பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். எந்த பிரச்சனைக்கும் நடைமுறையில் ஒத்து போகக்கூடிய வகையில் தீர்வைசொல்பவன். அமுதா பாட்டியே பல முறை பேரனிடம் தன் பிரச்சனைகளுக்கு உதவியை நாடியுள்ளார். ஆனால் இப்போது கல்யாண மகிழ்ச்சியில் இருக்கும் அவனிடம் தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள முடியாது.
மனம் கடந்த கால நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தது.
தன் மீது உயிரையே வைத்திருந்த கணவர் சேகர். மகன் ஹரி, மகள் கோதை. இவ்வளவு தான் குடும்பம். பிள்ளைகள் இருவரிடமும் மிகுந்த பாசம் இருவருக்கும். இந்த பாசம் தான் இப்போது வினையாக வந்து முடிந்திருக்கிறது.
கால் ரொம்ப வலிக்கிறதா? நீ போய் படுத்துக்கொள் அமுதா, நான் t.v சிறிது நேரம் பார்த்து விட்டு வந்து படுக்கிறேன். நான் போய் விட்டாலும் நீ பிழைத்துக்கொள்வாய். உங்களுக்கு போதுமான சொத்து சேர்த்து வைத்துள்ளேன். என்ன உன் மகனால் தான் தொந்தரவு இருக்கும்.என்றார் சேகர். அமுதாவுககு அப்போது தெரியாது , சேகர் தன்னை அம்போ என விட்டு விட்டு போய் விடுவார் என்று.
ஹரியின் மனைவி கமலி தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறாள். ஏங்க!இனியும் அம்மாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். நாமே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். பாவம்! உங்கள் மன அழுத்தத்தினால் தானே குடிக்க ஆரம்பித்தீர்கள். நான் உங்களுக்கு பக்க பலமாக எப்போதும் இருப்பேன்.
ஆஹா!என் மனைவி எவ்வளவு நல்லவள். தேன் தடவிய வார்த்தைகளால் கணவனின் நம்பிக்கையை சேர்க்க ஆரம்பித்து விட்டாள். பிறகென்ன? தன்ஆடம்பர வாழ்க்கைக்கு கணவனை பகடைக்காயாக ஆக்கிவிட்டாள். ஹரிக்கும் தன் பழக்கத்திற்கு பெரிதாக மனைவிடமிருந்து ஆட்சேபணை வராதது மிகவும் சௌகரியமாக போய் விட்டது.
அமுதாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கமலி ,ஹரியிடம்" ஏங்க மாமா போனபிறகு நீங்கள் தானே குடும்ப தலைவர்? அம்மாவிடம் பணம் சும்மாதானே இருக்கிறது. அதை அவர் கொடுத்தால் நீங்கள் ஏதாவது வியாபாரம் செய்யலாமே!"முதல் முடிச்சு போட்டாகி விட்டது.
இப்படியே தான் சேமித்து வைத்த பல லட்சங்களை கொடுத்தாகி விட்டது. ஒரு முன்னேற்றமும் இல்லை. விழலுக்கு இறைத்த நீராய் விட்டதை உணர்ந்த அமுதா மகள் கோதையிடம் தன் நகைகளை காப்பாற்ற கொடுக்கிறாள். தன் பெயரில் இருந்த ஒரே, ஒரு சொத்தை கோதை பெயரில் உயில் எழுதி வைக்கிறாள்.
இதை எப்படியோ அறிந்துகொண்ட மகனும், மருமகளும் எல்லாரிடமும் தங்களை அமுதா ஏமாற்றி விட்டதாக கூற, கோதையும் அவள் கணவரும், நமக்கு எதற்கு இந்த வம்பு என்று நகைகளை திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.
இப்போது தன் உதவிக்கு யாரும் இல்லை என்று நினைத்து, வீட்டில் உள்ள மகனும்,மருமகளும் தான் கதி என்று தப்பான முடிவெடுத்து,அவர்களின் வார்த்தைகளை நம்பி தன் பணம், நகை எல்லாவற்றையும் இழந்ததோடு, மகனின் தூண்டுதலின் பேரில் உயிலையும் அவன் பேருக்கு மாற்றி எழுதி விடுகிறாள். வியாபாரத்திற்கு கடன் என்று தன் வீட்டு பத்திரத்தையும் இணை பிணை யாக கொடுத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் போது மேலும் கடன் வாங்க கையெழுத்து கேட்கும் போதுதான், தான் செமையாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதனை உணர்கிறாள்.
இதையெல்லாம் தெரிந்துக்கொண்ட மருமகன் மிகுந்த கோபம் கொள்கிறார். கோதை சொல்கிறார்," அம்மா!அவர் கோபம் எளிதில் தணிந்து உனக்கு உதவி செய்வார் என்று எதிர் பார்க்காதே! என்னால் முடிந்த வரை உன்னை கடைசி வரை காப்பாற்றுகிறேன், என்று ஆறுதல் சொல்கிறாள்.பாவம்! நான் செய்த தவறுகளுக்கு அவள் என்ன தான் செய்ய முடியும்?
பணத்தின் மேல் ஆசை வேண்டாம்,என்று ஊருக்கு வேண்டுமானால் உபதேசம் செய்யலாம் ஆனால் நடை முறையில் என்ன நடந்தது அமுதாவுக்கு ? பணத்தின் மேல் ஆசை வைக்காது, பாசத்தினால் அள்ளி, அள்ளி கொடுத்ததினால், பிறர் தயவை எதிர் பார்க்கும் நிலைமை ஏற்பட்டு விட்டதே! பணம் பத்தும் செய்யும் என்பது உண்மையாகி விட்டதே!
முதலில் நம்மை காப்பாற்றிக்கொள்ள வழி செய்துக்கொண்டு தான் மற்றவர்களை பற்றி யோசிக்க வேண்டும் என்பதனை காலம் கடந்து உணர்ந்து என்ன பிரயோஜனம்?
தான் செய்த முட்டாள் தனத்தால் அநாதையாக நிற்கும் அமுதாவை யார் இனி காப்பாற்றுவார். அவள் கும்பிடும் தெய்வம் தான் காப்பாற்ற வேண்டும்!.
Comments
Post a Comment