இறைவன் என்ற ஒனறு உள்ளதா?
சிலர் இருக்கிறார் என்கின்றனர், சிலர் இல்லை என்கின்றனர், மற்றும் சிலர் அது இயற்கை என்னும் சக்தியே என்பார்கள். வேறு சிலரோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை , மனிதனே தான் தெய்வம் என்கின்றனர்.
இந்த விவவாதத்தில் இறுதியாக சொல்லப்பட்ட மனிதனே தெய்வம் என்னும் கூற்றை எடுத்துக்கொள்வோமா?
மனிதனே தெய்வமெனில் இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏன் மாற்றியமைக்கவோ, நிறுத்தவோ, முடிவதில்லை? உதாரணமாக, கிழக்கே உதிக்கும் சூரியனை ஏன் மேற்கே உதிக்கவைக்க முடிவதில்லை? இல்லை பத்து மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தையை ஒரு 15 அல்லது 20 மாதத்தில் பிறக்க வைக்க முடிவதில்லை? விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. நிலவில் மனிதன் கால் பதித்து விட்டான். ஆனால் வரும் பேரழிவான சுனாமியை தடுக்க முடியுமா? ஆகவே,இந்த கூற்றை ஒத்துக்கொள்ள முடியாது. மனிதனுக்கும் அப்பாற்பட்ட , எளிதில் புரிந்துகொள்ள முடியாத சக்தி ஒன்று இந்த பிரபஞ்சத்தை தன் ஆளுகைக்குள் வைத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
சரி! அப்படியென்றால் அது எங்குள்ளது? கண்ணால் பார்க்க முடியுமா?
கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் மனதால் உணரமுடியும் . மனம் என்பது ஒரு உறுப்பல்ல, அதுவும் உணர்வே! இறைவன் எல்லா உயிர்களிடத்திலும், இப்பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கிறான் என்பதே உண்மை.
ஒருவன் பொய் பேசலாம், திருடலாம்,, ஏமாற்றலாம்,தன் நிலைக்கு காரணம் மற்றவர்கள் தான் , தான்பொறுப்பல்ல என்று சாதித்து பேசலாம். ஆனால் மனசாட்சியை ஒரு காலத்திலும் ஏமாற்ற முடியாது.! செய்த தவறை குத்திகாட்டுவது நம் மனசாட்சியே !.
இப்போது தெரிகிறதா இறைவன் எங்கு இருக்கிறான் என்று!.என் மனம் என்று சொல்லும்போது நம் கை இறைவன் வாழும் நெஞ்சைத்தான் தொடுகிறது. தலையையோ, காலையோ தொடுவதில்லை.
இறைவனை காணும் வழி:-
இப்பாரத தேசத்தில் அவதரித்த எத்தனையோ அவதார புருஷர்கள் நமக்கு பல வழிகளை காண்பித்துள்ளனர்.
1) தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து வருத்தப்பட்டு இனி இம்மாதிரி செய்யாமல் இருப்பதற்கு அருள் செய்ய வேண்டும் என்று மன்றாடி கேட்க வேண்டும். கேட்பதோடு மட்டும் நிற்காது,அந்த தவறுகளை செய்யாது வாழ் நாள் முழுவதும் உறுதியாக நிற்க வேண்டும்.
2)தினமும் கோவிலுக்கு செல்கிறேன்.தானதர்மம் செய்கிறேன். இதற்கு மேலே என்ன செய்ய வேண்டும்?, இறைவனை காண,என்று இறுமாப்பு கொண்டால் இறைவன் கிடைப்பானா? என்றால் எதிர்மறை பதிலே கிடைக்கும். பின் என்னதான் செய்ய வேண்டும்? இறைவன் வாழும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் உடலை தாய்மை படுத்துவது போல நம் மனதினில் எழும் வேண்டாத எண்ணங்களை வரவொட்டாது அவ்வப்போது சுத்தப்படுத்துதல் அவசியம்.
மனத்துகண் மாசிலன் ஆதல் அனைத்துலகும்ஆகுக நீல பிற.
3) கடவுளை கற்சிலையாக நினைக்காது,உயிரோட்டமுள்ள ஒன்றாக நினைத்து உபசாரம் செய்ய வேண்டும்.ஸ்வாமி இராமகிருஷ்ணர் காளியிடம் பேச வில்லையா? உணவூட்டவில்லையா?
4) கடவுள் நகமும் சதையுமாக மனித ரூபத்தில் நம் கஷ்டங்களை தீர்க்க வரமாட்டார். பின் எப்படி? மனித ரூபத்திலோ அல்லது வேறு எந்த ரூபத்திலோ வந்து தான் காப்பாற்றுவார். சாய் பகவான் நாய் ரூபத்தில் வரவில்லையா?
5) உண்மையாகவே நான் கடவுளை வழிபடுகிறேன்.பின் ஏன் எனக்கு இத்தனை துன்பங்கள்? இதற்கு பதில் , உன் ஊழ்வினைப் பயனே! என்றால் பின் எதற்கு நான் சாமியை கும்பிட வேண்டும்? ஊழின் வலியது யாவுள? என்றால் அந்த வலியதையும் , வெற்றி கொள்ளும் வழி தான் என்ன? இதற்கு ஒரே வழி நிஜமான அன்பு வைத்து, நான், எனது என்பதை ஒழித்து விட்டு இறைவனிடத்து சரணாகதியடைந்து விடுவதுதான்.
6) கடந்த காலத்தில் சேர்த்த கர்ம வினைகளை தாங்கும் சக்தியை கொடுப்பது இறைவனே!
7) கர்ம வினையை குறைக்க இந்த ஜென்மத்தில் நல்ல செயல்களையே செய்தால் வரப்படும் கர்ம வினையின் தாக்கத்தை ஓரளவாவது குறைக்க முடியுமே தவிர முற்றிலும் தவிர்க்க முடியாது.
ஒவ்வொரு செயலையும் செய்யும் போதோ, அல்லது ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் போதோ, இறைவன் உறையும் மனசாட்சியிடம் கேளுங்கள்,அங்கே தெளிவான பதில் கிடைக்கும். மனம் எப்படி வேண்டுமானாலும் தான் செய்த தவறுக்கு சமாதானம் செய்துக்கொள்ளும், ஆனால் மனசாட்சி ஒரு சிறந்த நீதிபதி.அது எந்த தவறையும் நியாயப்படுத்தவே படுத்தாது.
மனிதநேயமே இறைவன்.
பொருள் கொடுத்து உதவ முடியாதவர்கள், கண்தெரியாதவர்கள்,நடக்க முடியாத ஊனமுற்றவர், கர்ப்பிணி பெண்டிர்,ஆகியோருக்கு உதவுவதும் மனிதமே!
இறைவன் அசையும் பொருளிலும் உள்ளான், அசையா பொருளிலும் உள்ளான்.ஊனிலும்,உயிரிலும்உள்ளான் கலந்துள்ளான். அவன்ஆணுமல்ல,பெண்ணுமல்ல.அநாதியானவன். நான் ஆண்மகன், பெண் எனக்கு அடிமை என்று பிதற்றும் அறிவிலிகள் பத்தாம் பசலிகளுக்கு எடுத்துகாட்டாக அர்த்தநாரீஸ்வரர் உருவம். எவனொருவன் தன் மனைவி மக்களை , பெற்ற பெற்றோரை சமமாக மரியாதையுடன் நடத்தி, வீட்டில் சந்தோஷம் நிலை பெற செய்கிறான், அவனிடத்தில் இறைவன் உறைகிறான்.
.இப்போது தெரிகிறதா? இறைவன் உள்ளான், அவன் எங்கு உள்ளான் என்று?

Comments
Post a Comment