மரணத்தை மறந்த மனிதன், மனிதனை மறக்காத மரணம்




மரணம் என்பது என்ன?

இவ்வுலகில் கொடுக்கும் எதையும் இங்கேயே இருக்க விடுவதில்லை இறைவன். கொடுக்கும் இறைவன், தான் கொடுத்தவற்றை தானே திரும்ப எடுத்துக்கொள்கிறான். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.  இருந்தும் ஏன் இந்த ஓட்டமப்பா! தன் தேவைக்குமட்டுமல்ல த ன் தலைமுறைக்கும் சேர்த்து வைக்கத்தான் இந்த ஓட்டம். மனிதன் மரணம் நிச்சயம் என்று தெரிந்தே அதை மறக்கிறான். அதை தள்ளி போட முயற்சித்து கடவுளிடம் தோற்கத்தான் செய்கிறான்.

காதருந்த ஊசியும் கடைவழி வாராது காண். நீ இறந்த பின் உன் உடலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இடுகாட்டிற்கு அனுப்பத்தான் விரும்புவர். சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த எதுவுமே உன்னுடன் வரப்போவதில்லை.


மரணபயம்

மரணம் என்பது தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ  முடியாது என்பதை ஒவ்வொருவரும்  உணர்ந்தாலும்,நம்மில் எத்தனை பேர் பயமில்லாத மரணத்தை எதிர்கொள்கிறோம்? மரண பயம் என்பது மரணத்தை விட கொடியது.. இந்த பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பது தான் விவாதத்திற்குரியது.

மரணம் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு விடை திருக்குறள் கூறுகிறது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 

விழிப்பது போலும் பிறப்பு.

எவ்வளவு எளிமையான பதில். அப்பா! நீ தூங்கும் போது உன்னை பற்றிய சிந்தனை ஏதாவது உள்ளதா? இல்லையே!  நீ உன்னை மறந்து தானே தூங்குகிறாய்? உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதேதெரிவதில்லையே? மரணமும் அதைப்போன்றது தான். 

மரணம் வரும் நேரம் தெரியுமா?தெரியாது.மரணத்தை தள்ளி போட முடியுமா?முடியாது! முதலில் வரும் நேரம் தெரிந்தால் தானே தள்ளி போட! அப்படியே தெரிந்தாலும் நம்மை படைத்தவனை தவிர யாராலும் முடியாது. மார்கண்டேயனை காலன் நெருங்கிய போது அந்த கைலாயபதியால்தானே காப்பாற்றப்பட்டார்!. 

நெருநல் உளனொருவன்இன்றில்லைஎன்னும்பெருமைஉடைத்துஇவ்வுலகு.

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.
சரி ! மரணம் வரும் நேரம் தான் தெரியாது, அது எப்படி இருக்கும் என்பதற்கான விடையை தான் வள்ளுவன் மேலே குறிப்பிட்ட குறளின் வாயிலாக தருகிறார்.

மரணம் நடந்த பின் என்ன நிகழும்? 

கண்ணதாசன் சொல்லுகிறார்,மரணித்து பார் தெரியும் என்று. ஆம் அவரவர்களின் அனுபவங்கள் தான் ஒன்றை நம்ப வைக்கும். 

கண்டவர் விண்டதில்லை,விண்டவர், கண்டதில்லை என்ற சொல்லுக்கேற்ப இறந்தவர் மீண்டும் வந்து சொல்லப்போவதும் இல்லை, இப்போது உயிருடன் இருப்பவரும் அதை கண்ணால் காணப்போவதும் இல்லை. ஆகவே ஒரு புரியாத புதிர் தான் இந்த மரணம் என்பது.மரணத்தை பற்றிய விழிப்புணர்வு வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அர்த்தமுள்ளதாக , பயனுள்ளதாகஆக்குகிறது.

மரணத்தைப்பற்றி அறிந்தவன் தன் வாழ்நாளின் ஒரு நொடியைக்கூட வீணாக்க மாட்டான்.

மரணத்தின் வகைகள்:-

கெட்ட பழக்கங்களை விடுதலும்,ஒரு வகை மரணமே.புதிய வாழ்க்கையை தொடங்குவதும், மரணத்தை அடுத்து எடுக்கும் பிறப்பை போன்றதே! உயிரின் செயல் பாடுகளின் நிரந்தர நிறுத்தம் தான் மரணம்.

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று முறை மரணிக்கிறான்.

1)தன்முயற்சியில் தோல்வியை தழுவும் போது.

2) தன்னிடமுள்ள கெட்ட குணங்களை நிரந்தரமாக களைந்து புது பிறப்பெடுக்கும் போது.

3)தம்மில் இளையோர்கள் தம்மை உதாசீனப்படுத்தி, ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தும் போது.

இதில் மூன்றாவதாக கூறப்பட்ட மரணம் தான் கொடியது. முதுமையில் இயலாமையும் சேர்ந்துகொண்டு மற்றவர்களின் உதவிதேவைப்படும் போது உதாசீனப்படும் போது ஏற்படும் வலி உள்ளதே அது வார்த்தையால்விளக்கமுடியாது,அனுபவித்தால் தான் தெரியும்.

மரணம் கற்றுக்கொடுக்கும் பாடம்

மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நம் வாழ்க்கைக்கு அதிக அர்த்தத்தைத் தருகிறது. மரணத்தின் யதார்த்தத்திற்கு விழிப்புணர்வூட்டுவது நித்தியமானதைத் தேட நம்மைத் தூண்டுகிறது மற்றும் ஒவ்வொரு கணத்தையும் அதிகம் பயன்படுத்த நம்மைத் தூண்டுகிறது.

மரணம் இல்லை என்றால் என்ன நடக்கும்? வாழ்க்கை தொடரும் , ஆனால் வாழ்க்கை, வலிமிகுந்ததாக, மந்தமானதாக மாறும்.

மரணம் நம் நிகழ்காலத்தை பொக்கிஷமாக ஆக்குகிறது. நவீன நாகரீகம் மரணத்தை புறக்கணிப்பது அல்லது மறுப்பது என்று கூறப்படுகிறது. ஆசை, ஆசைகளின்மேல் உள்ள நாட்டத்தால் மரணத்தை தள்ளி போட முயற்சிக்கிறது . பல்வேறு மருத்துவ உதவிகளை நாடுகிறது. இந்த எண்ணம் என்ன ஒரு முட்டாள்தனமானது . 

நாகரீகம் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. ஒரு சமூகம் அல்லது நாகரீகம், ஒரு தனிநபரைப் போலவே, ஆசைகளுக்கும்,, சொகுசு வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டு இறப்பு பற்றிய அடிப்படைக் கேள்வியைத் தவிர்க்க முயற்சிக்கிறது. மரணத்தை பற்றி பேச்செடுத்தாலே குடும்பம் விரும்புவதில்லை. அது அந்த கணம் வாழ்வதற்கு அப்பால் பார்க்கத் தவறி ஆன்மீக வீழ்ச்சியில் விழுகிறது. இவ்வுலக இன்பத்தில் மேன்மேலும் மூழ்குகிறது.

இன்றைய சமுதாயத்தின் நிலை

இன்றைய சமுதாயம் , நிகழ்காலத்தைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறது. நல்ல உணவோடு, ஆடம்பரமான, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும். பாவ, புண்ணியத்தை பற்றிய கவலை கிடையாது. அதனால் மற்ற உயிர்களிடத்து அன்பு, இரக்கம் கிடையாது. சுய நலமே விஞ்சி நிற்கிறது.

கோவிலுக்கு போவது கூட 60 வயதிற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் தான்பெரும்பாலோரிடம் உள்ளது. 

கல்வியில் கூட பணம் ஈட்டும் கல்வியே பிரதானமாக உள்ளது. கல்வியோடு ஆன்மீகத்தை,நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் பள்ளியை நாடுபவர்கள் வெகு சிலரே! இவையெல்லாம் மேல் நாட்டின் மோகத்தால் ஏற்பட்ட தாக்கம்.

ஆன்மீக கல்வி தான் மரணத்தின் பின் நற்கதியை கொடுக்கும் என்று அறிந்துகொண்டால் மரணத்தை பற்றிய பயம் எப்படி வரும்? தெய்வத்தால் ஆகாதது எதுவுமில்லை!

ஓம் நமசிவாய!










 


Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........