Mugangal
வாழ்க்கைஎன்பதுஎல்லோருக்கும்,எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. அப்படித்தான் எல்லோர் முகங்களும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் எதிர் கொள்ளும் சம்பவங்களுக்கு தகுந்தவாறு அவர்களின் முகங்களும் மாறுகின்றது.
அகம் தூய்மையாக இருந்தால் முகமும் தூய்மையாக இருக்கும்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
தூய்மையான மனதின் சொந்தக்காரர்களின் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். மற்றவர்களை அது எளிதில் ஈர்த்து விடும். விவேகாநந்தர் போன்ற பெரிய ஞானிகளின் ஒளி பொருந்திய முகங்களே இதற்கு சான்று.
ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லாருக்கும் முகம் உண்டு. அவன் படைப்பில் அழகு என்பது எல்லோருக்கும் ஏதோ ஒரு உறுப்பில் உள்ளது
மற்றவர்களை கவரக்கூடிய முகத்தில் கூட ஏதாவது குறை இருக்கலாம். ஆனால் அதேசமயம் மற்றவர்களால் விரும்பாத முகத்தில் கூட ஏதாவது ஒரு உறுப்பு அழகாக இருக்கலாம்.அது தான் இறைவன் படைப்பின் ரகசியம்.
நாம் வாழும் காலங்களில் இறைவன் கொடுத்த முகத்தோடு மட்டும் நாம் வாழ்வதில்லை.சந்தர்பங்களுக்கு தக்கவாறு பல முகங்களை போட்டுக்கொண்டுதான் நாம் வாழ வேண்டியுள்ளது. இது ஏன் ?
இது ஏனென்றால் நாம் வாழும் வாழ்க்கையின் போது ஒன்பது வகையான சந்தர்ப்பங்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அப்போது அதற்கு தகுந்தவாறு நம் முக பாவனைகள் மாறுகின்றது.
கௌரவம்:-
ஒருவன் தான் வாழும் சமுதாயத்தில் மதிக்கபடுவதை தான் விரும்புவான். இக்காலத்தில் பணம் படைத்தவர்களையும், அரசியல் செல்வாக்கு உடையவர்களையும் தான் மதிக்கிறார்கள்.
தன்னை செல்வந்தன் என்று காட்டிக்கொள்வதற்காக விலையுயர்ந்த பொருட்களை சேர்க்கிறான். அதற்கு கடன் வாங்குவதற்கு கூட தயங்குவதில்லை. கடனை திரும்ப கேட்கும் போது தனக்கு மிகுந்த கடனோ, அல்லது அரசியல் செல்வாக்கு இருப்பதாகவோ பொய் முகம் காட்டுகிறான்.
கோபம்:-
பிள்ளைகள் தாங்கள் கேட்டது கிடைக்காத பட்சத்தில் கோப முகத்தை காட்டுகின்றனர். பெற்றவர்களும் தன் குழந்தைகள் தாங்கள் சொல்கின்றபடி நடக்கா விட்டால் தங்கள் அதிருப்தியை முகத்தில் காட்டுகின்றனர்.
இந்த கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் வித்தியாசம் உண்டு. கோபம் என்பது திருத்திக்கொள்ளும் தன்மையது. அது தணியும் தன்மையுள்ளதான் . எதற்காக கோபப்பட்டோம் என்று ஆராயும் போது அது மாறும் இயல்புடையது. இதில் ஆபத்து குறைவு. ஆனால் கோபத்தின் உச்ச நிலை ஆத்திரம். ஆத்திரத்தில் தான் இன்னது தான் செய்கிறோம் என்பதை அறிய மாட்டார்கள். அடி, தடி, வெட்டு, குத்து, இவையாவும் ஆத்திரப்படுவதினால் விளையும் வினைகள் தான் அதிகம். ஆத்திரபட்ட முகம் சிவந்து , பார்ப்பதற்கே பயமாக, விகாரமாக இருக்கும். இத்தகைய முகத்தை யார் தான் விரும்புவர்?.
மகிழ்ச்சி :- இந்த உணர்வு, நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டாலோ, எதிர்பார்த்த விஷயம் நடந்து விட்டாலோ, மகிழ்சியடைகிறோம். மாணவனுக்கு தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்தால் மகிழ்ச்சி. பெற்றோருக்கு தன் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைந்தால் மகிழ்ச்சி. பக்தனுக்கு தான் வழிபடும் இறைவனின் ஆசீர்வாதம் கிடைத்தால் மகிழ்ச்சி. மனம் மகிழ்ச்சி அடைந்தால் உள்ளமும், முகமும் மகிழ்ச்சியுறும் இதைப்பார்த்து மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.
பயம்:- பொதுவாக, நிறைய பேர்களுக்கு பாம்பை கண்டால் பயம், தேளை கண்டாலும் பயம்.அது கடித்தால் ஏறும் விஷம் உயிரை பறிக்கும் என்பதினால் தான் . சிலருக்கு இருட்டில் தனியாக இருப்பதற்கு பயம். எதிர்காலத்தை நினைக்கும் போது பயம். இது பாதுகாப்பின்மையால் ஏற்படுகிறது. உயரத்தில் நிற்பவர்கள் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம். நடக்காத ஒன்று நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற கற்பனையில் எழுவதுதான் பயம். இது ஒருவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த பயத்தை எவனொருவன் வெல்கிறானோ அவனே வாழ்க்கையில் முன்னேறுகிறான். இறப்பிற்கு பிறகு என்ன ஆவோம் என்று சிந்திக்கும் போது மரண பயம் உண்டாகிறது. மரணத்தை பற்றிய பயத்தை போக்க வேண்டுமெனில் இறைவனிடம் சரணாகதியடைவதை தவிர வேறு வழியொன்றுமில்லை.
அவனருளாளே அவன்தான் வணங்கி நின்றால் எந்த பயமும் நம்மை அணுகாது.
பெருமிதம்:- மகன் தந்தைக்காற்றும்உதவி
இவன் தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல். ஆம்!
மற்றவர்கள் தன் பிள்ளையை பார்த்து ஆஹா! இந்தபிள்ளையை பெறுவதற்கு இவனுடைய தந்தை என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கூறுவதை கேட்கும் போது அடையும் பெருமிததிற்கு அளவு ஏதாவது உண்டா! விளையாட்டு வீரர்கள், உலக அரங்கில் வெற்றிக்கனியை நம் நாட்டிற்கு கொண்டுவரும் போது நாடே பெருமிதம் கொள்கிறது. புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை செய்யும் போது நாடு பெருமிதத்தால் விம்மி புடைக்கிறது.
. வெகுளி:- உள்ளதை உள்ளபடி சொல்லும் வெகுளியின் முகத்தில் எந்த கபடமும் இருக்காது. எதையும் மறைக்கவோ,பிறர் கூறுவதை திரித்து கூறவே, மற்றவர்களின் பேச்சின் உண்மை தன்மையை ஆராயவோ இவர்களுக்கு தெரியாது. மற்றவர்களின் கூற்றை அப்படியே நம்பி விடுவார்கள். இதனால் பல சிக்கல்களுக்கும் உள்ளாவார்கள். இத்தகைய முகங்களை உடையவர்களை அசடு , இங்கிதம் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு. பகைமை பாராட்டும் குணம் இவர்களுக்கு இருக்காது.
கபடம்:- தான் வாழ்வதற்காக பிறரை நம்ப வைத்து நாடகமாடுகிற முகங்களை இனம் கண்டு பிடிப்பது சற்று சிரமம் தான். மற்றவர்களிடத்துமிகுந்தஅக்கறையுடன்,அவர்களின் நலனுக்காகவே தான் இருப்பதாக நடிப்பார்கள். அவர்களின் முகத்திரை எப்போது கிழியும் என்றால் அவர்கள் எதிர்பார்த்தது தனக்கு கிடைக்காது என்று தெரிந்தவுடன், சொல்லாமல் கொள்ளாமல் நகர்ந்துகொள்ளும் போது தான்.
ஆதிக்கம்:- மற்றவர்கள் தன் சொற்படி தான் நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் தன் பார்வையிலேயே தான் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று முகம் காட்டுவர். எல்லா இடங்களிலும் தனக்கு தனி மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைப்பர். இவர்களுக்கு பிடிவாதம் மிகுதியாக இருக்கும்.
பொறாமை:- இந்த குணம் உடையர்களின் கண்களே அதை காட்டிக்கொடுத்துவிடும். மற்றவர்களின் வெற்றியை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் வீழ்ச்சி கண்டு எக்களிப்பர்.
இவை எதுவும் இல்லாது தன் மனதை நிர்மலமாக வைத்துக்கொண்டு தன் தேவைக்கு மிஞ்சியதை பிறருக்கு கொடுத்து வாழ்பனே செல்வந்தன். தன் தேவைகளை பெருக்கிக்கொண்டு யாருக்கும் உதவாமல் இருப்பவன் ஏழை மட்டுமல்ல, திருடனும் கூட. ஏனென்றால் மற்றவர்களுக்கு சேர வேண்டியதை இவனே அனுபவிக்கிறான் அல்லவா?
இவ்வாறெல்லாம் வாழாது இறைவன் கொடுத்த முகத்துடன் கள்ளம் கபடம் அறியாது, நமக்கு கிடைத்திருப்பது இறைவனின் சொத்து,அதனை காப்பாற்றும் கடமை தான் நமக்கு உள்ளது , எதுவும் நமக்கு சொந்தமில்லை. இதை ஒவ்வொரு மரணமும் உதாரணமாய் நின்று நமக்கு உணர்த்துகின்றது.
.
Comments
Post a Comment