அழுக்கு அழகுக்கு எதிரி.அழுக்கை யாரும் விரும்புவதில்லை. கண்ணாடியில் அழுக்கு படிந்தால் பிம்பம் சரியாக தெரிகிறதா? இல்லையே! அதை தூய்மை படுத்தாவிட்டால் அது உபயோகமற்றதாகி விடுகிறது.அது மாதிரி தான் மனதில் அழுக்கு படிந்தால் , புறத்தே எவ்வளவு அழகாக இருந்தாலும் நம்மை ஒருவரும் விரும்பமாட்டார்கள் அழுக்கான எந்த பொருளின் எடையும் கூடுதலாகத் தான் இருக்கும். மனதில்அழுக்கு இருந்தாலும் மனபாரம்அதிகரிக்கத்தான் செய்யும்.
உதாரணமாக, நாம் ஒருவரைப்பற்றி புறம்கூறினோம் என்றால் அந்த பொய் நம் மனத்தை அழுத்திக் கொண்டுதான் இருக்கும்.
இந்த மன அழுக்குகள் பிறப்பிலேயே வருவதில்லை. நாம் வளர,வளர நம்முடன் தொடர்பில்உள்ளவர்கள் மூலமே இவை நிகழ்கிறது.
குழந்தை பிராயத்தில், தன் தாய் தன்னைவிடுத்து வேறு ஒரு குழந்தையின்பக்கத்தில் கவனத்தை செலுத்தும் போது ,அது பொறுக்காமல்,அழ ஆரம்பிக்கிறது. இங்கேதான் மனிதனின் நிர்மலமான மனதில் முதல் கறை படிகிறது.
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமையின் விளைவாக ஆசை தலைதூக்கும். ஆசை நிறைவேறாவிட்டால், கோபம் தலை தூக்குகிறது. கோபத்தில் விளைவாக இன்னா சொல் சொல்ல நேரிடுகிறது.
மனதில் படியும் சில அழுக்குகள்:-
1)பொறாமை:-
2) பேராசை
3)கோபம்
4)இன்னா சொல்லல்
5)காமம்
பொறாமை:- பொறாமை பொல்லாதது. தான் விரும்பிய ஒன்று தனக்கு கிடைக்காமல் தனக்கு தெரிந்த ஒருவருக்கு கிடைக்கும் போது ஏற்படும் உணர்ச்சி.
நற் செயல்களில் மற்றவர்களிடம் பொறாமை கொண்டு தானும் அப்படி செய்ய வேண்டும் என்று செயல் பட்டால் அது சமுதாய மேம்பாட்டிற்கு உதவும்.
கல்வி கற்பதில் பொறாமை கொண்டு போட்டி போட்டுக்கொண்டு படித்தால் அது ஆரோக்கியமான வளர்ச்சியை கொடுக்கும். பொறாமை கொண்டவர்க்கு ஏற்படும் தீமைகள்:-
1)இவர்களுக்கு பகைவர்கள் வெளியிலிருந்து வரவேண்டியதில்லை. இவர்களுக்குஇவர்களே பகைவர்கள்.
2) நற்பெயர் கெடுகிறது.
3)நண்பர்களும், உறவினர்களும் இவர்களை விட்டு விலகுகின்றனர்.
4) உடல்நலம் கெட்டு நோய்கள் அழையா விருந்தாளியாக வருகின்றது.
5) நேர் வழியில் நடக்காது, பிறரைப்பற்றி புறம் கூற தூண்டுகிறது.
6) பிறரது மேன்மையை நேர்மறை பார்வையில் பார்க்க மனம் ஒப்புவதில்லை.
பொறாமை கொண்டவர்கள் பிறரது நற்பண்புகளை போற்றுவதில்லை. ஒருவன் தானத்தில் சிறந்து விளங்குகிறார என்று வைத்துக்கொள்வோம். அதை பாராட்டாது அவனுக்கென்ன? உழைத்து சம்பாதித்ததா?ஊரை கொள்ளையடித்து சம்பாதித்தது தானே! செய்த பாபத்திற்கு பரிகாரமும இதை செய்கிறான் அல்லது முன்னோர்கள் சேர்த்து வைத்ததை நோகாமல் கொடுக்கிறான் என்று தூற்றுவார்கள். தான் அவர்களைப்போல் வாழ முயற்சிக்காவிடினும், அவர்களுக்கு எந்தெந்தவிதத்தில் தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்தந்த விதத்தில் இடைஞ்சல் கொடுப்பார்கள்.
பொறாமை என்ற அழுக்கை படிய விடாது தடுப்பது எப்படி?
சிறு வயதிலிருந்தே குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை பொதிந்து கிடக்கிறது,அது என்ன என்பதை கண்டறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும். ஒருவன் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கலாம். மற்றொருவனோ விளையாட்டில் திறமைசாலியாக இருக்கலாம். அதற்காக விளையாட்டில் சிறந்தவனை படிப்பில் சிறந்தவனோடு ஒப்பிட்டுக்கொண்டும், புகழ்ந்துகொண்டும் இருந்தால் அவன் மீது பொறாமை வராது என்ன செய்யும்?
பல வீடுகளில் பெரியவனை பார்த்து , " நீ ஏன்டா இப்படி இருக்கிறாய்? தம்பியை பார் எப்படி பொறுப்பாக உள்ளான்" என்று சொல்வதை கேட்கிறோம். இது மிகவும் தவறு.
ஆசை:-
ஆசை இருக்கலாம். அது இருந்தால் தான் நாம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.ஆனால் பொறாமையின் விளைவாக ஆசையே பேராசையாக மாறி விடக்கூடாது. அடுத்த வீட்டுக்காரன் அடுக்குமாடி கட்டுகிறான் என்று நீ உன் வருமானத்திற்கு மீறி கடன் வாங்கியாவது ஒரு படி அவனுக்கு மேலே கட்ட வேண்டும் என்று நினைத்தால் அந்த பேராசையே உன்னை அழித்து விடும் என்பதனை நீ அறிந்துக்கொள்.
பேராசையே சட்டத்திற்கு புறம்பான பல விஷயங்களை செய்ய தூண்டுகிறது. அதனால் தான் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பம் கெடின்’ ஆம் துன்பத்துள்துன்பம் என்பது பேராசை தான் அதை நீக்க கற்றுக்கொண்டால் எந்நாளும் இன்பமே!.
ஆசை நிறைவேறாது ஏமாற்றம் ஏற்படும் போது கோபம் வருகிறது. கோபம் தலைக்கேறினால் நாம் செய்யும்செயல்நமக்கேதெரிவதில்லை.இதை வளரவிட்டால்கொலையில் கூட முடியும். கோபம் எப்போது கொள்ள வேண்டும் என்பதை முண்டாசு கவிஞன் அழகாக கூறுகிறான்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
சினத்தின் தீமையை பற்றி கூறுகையில்,
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடு.
சரி கோபமே கொள்ளகூடாதா? இல்லை , கோபம் கொள்ளலாம். அது வார்த்தையில் மட்டும் தான் இருக்க வேண்டும், மனதில் மறந்தும்கூடஏற்றிவைத்துக்கொள்ளக்கூடாது.மற்றவர் செய்யும் தவறை திருத்தும் வகையில் நம் கோபம் இருக்க வேண்டுமே தவிர, ஒரு காலும் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்ககூடாது. பிள்ளைகள் தவறு செய்யும் போது, அறிவுரை பயனற்று போகும் சமயத்தில் கோபம் , அவர்களை திருத்துவதற்கு கை கொடுக்கும்.
இன்னா சொலல்:- இந்த இன்னா சொலலில் புறம் சொல்லுதலும் அடக்கம். பிறர் இல்லாத போது அவர்களைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக சொல்லுதல்
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்வதை விட செத்து மடிவதே மேல் என்கிறான் வள்ளுவன்.
சரியான ஆதாரம் இல்லாது ஒருவரை பற்றி ,அவரது வாழ்க்கையைப்பற்றியோ, ஒழுக்கத்தை பற்றியோ, அவர் இல்லாத சமயத்தில் பேசுவது மிகவும் தவறு.
நாம் பேசும் போது வார்த்தையை கவனித்து பேச வேண்டும். வயதில் மூத்தவர்கள் என்று கூட யோசிக்காமல், கோபத்தாலோ, ஏமாற்றத்தாலோ, வெளி வரும் வார்த்தைகளால், அவர்களின் மனம் நோகச் செய்வதால் , நமக்கு அவர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதில்லை.
பிச்சைக்காரர்களிடம் கூட " இல்லை" என்னும் கடும் வார்த்தையை கூறாது சொல்லாதுஅடுத்த வீட்டில் கேள் என்று சொல்பவர்கள் நிறைய உண்டு.
ஆகவே இனிய சொற்களையே பேச வேண்டும். கோபத்தில் கூட மறந்தும் தகாத சொற்களை பேசக்கூடாது.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
ஆறாத வடுவாய்,மறக்கமுடியாத சொல்லாய் இந்த சுடுசொற்கள் நம் மனதில் நம் ஆயுள் பரியந்தம் நிற்பதால் நாம் எந்த சமயத்திலும் சுடு சொற்களை தவிர்த்தால் நாம் எல்லோராலும் விரும்பப்படுவோம்
காமம்:- காமம் என்பது கணவன் மனைவியிடத்து இருந்தால் அது அன்பாக விரிவடைகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தலை தூக்கும். பிள்ளைகள் பிறந்து, தலைமுறை வளர்ச்சி காண்கிறது. இது உடல் சார்ந்த விஷயமல்ல,உள்ளம் சார்ந்த மகத்தான வி ஷயம். இதுவே இறைவனை நோக்கி இருந்தால் அதை விட மகத்தான விஷயம் வேறு ஒன்றுமில்லை.
இதுவே இல்லாளை தவிர்த்து,உருவத்தால் ஈர்க்கப்பட்டு,தகாத உறவு கொண்டு ஒழுகினால்அது அழுக்காக மாறி நாசத்தை விளைவிக்கும்.
உடல் நலம் கெடும்,
நற்பெயர் கெடும்
குடும்பத்தில் அமைதியும் கெடும்.
அவ்வாறு இல்லாது அழுக்கில்லா மனதை பெற்றிருந்தால் ஆண்டவனின் அருளாசி என்றும் உண்டு.

Very good
ReplyDeleteநல்ல கருத்துக்கள். அருமை. வாழ்க வளமுடன்.
ReplyDelete