மண் மகள்
ஆசையின் பிறப்பிடம் மண் தான். இந்த மண் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. நாம்தான்அதை சரியாகபுரிந்து கொள்வதில்லைஅல்லது ஏற்றுக்கொள்வதில்லை. மண்ணில் தோன்றிய யாவும் மண்ணில் நிலைத்து நிற்பதில்லை. உதாரணமாக , ஒரு விதையை மண்ணில் ஊன்றி வைக்கிறோம். அது மண்ணை கிழித்துக்கொண்டு விருக்ஷமாக வளர்கிறது,பலன் கொடுத்து முடிந்தவுடன், "என்னிலிருந்துதானே வந்தாய், என்னிலேயே அடங்குவாய்" என்று மண் மகள் அழைத்துக்கொள்கிறாள்.
மனிதனின் கதையும் இவ்வாறே முடிகிறது. வந்த காரியம் முடிந்தவுடன், மண் மாது அணைத்துக்கொள்கிறாள்.
மண் கற்றுக்கொடுக்கும் பாடம்.
1) உலகத்தில் தோன்றியது எதுவும் நிலையானது இல்லை.
2)தோன்றிய இடத்திலேயே தான் மறைய வேண்டும்.
3) சேர்த்த பொன் , பொருள் , எதுவும் நாம் புறப்படும் போது எடுத்துக்கொண்டு போக முடியாது.
ஐம்பூதங்களில் ஒன்றுதான் மண் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆகாயத்தை தவிர மற்ற மூன்றும் மண்ணின் மூலமாக சம்பந்தப்பட்டது தான்.மண்ணின் சம்பந்தமே ஆசையை வளர்க்கிறது. மண்ணின் மேல் பிறந்த இந்த பூதவுடல் மண்ணிலேயே புதைக்கப்படுகிறது அல்லது எரியூட்டப்படுகிறது. இது நம் ஒவ்வொருவரும் அறிந்ததே!
நிலையாமையை இதைவிட எங்கே விளக்கமாக காண முடியும். ?
இருந்தாலும் இந்த மண்ணாசையை அவ்வளவு எளிதாக விட முடிவதில்லை.
இது நம் அறியாமையால் தானே.
இந்த மண்ணில் மேல் நிற்கின்ற நம் ஒவ்வொருவரையும் காந்தம் போல் மண் இழுத்து தன் மேல் நிறுத்திக்கொள்கிறது.
அது நமக்கு கொடுக்கும் எல்லாமே அதற்கே சொந்தமானது. நாம் அதன் காவலாளிகள் மட்டுமே!. மண் கொடுக்கும் செல்வத்தை அழிக்காமல் நற்காரியங்களுக்கு பயன்படுத்தி அதனை விருத்தி செய்ய வேண்டும்.
இயற்கை செல்வங்களை அழித்தாலோ, முறையற்ற வகையில் பயன் படுத்தினாலோ
மணமகள் கோபத்தில நடுங்கி பூகம்பம்,சுனாமி போன்ற பேரழிவுகளை ஏற்படுத்துகிறாள். தாயின் வயிற்றுக்குள் இருக்கும் வரை நமக்கு எந்த ஆசையும் வருவதில்லை. வெளியே வந்து மண்ணை தொட்ட சில நாட்களிலேயே நகர்ந்து அந்த இடத்தை தனதாக்கிக்கொள்கிறோம். நடந்தும் ஓடியும்,மண்ணாசையை வளர்த்துக்கொள்கிறோம். அடுத்தவர் இடத்தை பிடிக்க உயிர்பலி கொடுக்கவும் தயங்குவதில்லை. ரஷ்யா,உக்ரேன் போரே இதற்கு சிறந்த உதாரணம். சீனா ,பாகிஸ்தான் எல்லைபோரில் இழந்த மனித உயிர்கள் தான் எத்தனை,எத்தனை! எல்லாம் இந்த மண்ணாசையினால் தானே!
பாரதபோரே மண்ணை யார் ஆள்வது என்பதற்காக நடந்தது தானே!
பாரத போரிலே பீஷ்மர் அம்புபடுக்கையிலே கிடக்கிறார். அப்போது அர்ஜூனன் கிருஷ்ணனை பார்த்து கேட்கிறான்,"இவ்வளவு இழப்பிற்கு பிறகும் நான் போராடத்தான் வேண்டுமா?யார் என் மனம் முழுக்க நிறைந்திருந்தாரோ, யாரைப்போல நான் ஆக வேண்டும் என்று நினைத்தேனோ, அவரையே என்னை கொண்டு வீழ்த்தி விட்டாயே கண்ணா!" என்று புலம்புகிறான்.
"பீஷ்மரைப்போல் ஆவது என்பது அவ்வளவு எளிதா? பீஷ்மரைப்போல் ஆவது வேண்டுமானால் நடக்கலாம்,ஆனால் அவர் மேற்கொண்ட பீஷ்மத்தை அவ்வளவு எளிதாக அடைமுடியாது அர்ஜூனா. " என்று பதில் வருகிறது.
பீஷ்மம் என்பது பிரம்மசாரியம் மட்டுமல்ல, தான் கொண்ட கொள்கைக்காக, தன் சுக துக்கங்களை பாராட்டாமல் குலத்திற்காக,சமூகத்திற்காக அல்லது நாட்டிற்காகவோ வாழும் வாழ்க்கை. தமிழ் நாட்டில் நம் கர்ம வீரர் காமராஜர் கண்துஞ்சாது, தமிழ் நாடு உயர் நிலை அடைவதற்காக உழைக்கவில்லையா? தன் நிலை தாழ்ந்தாலும், இன்னல் பலவற்றை காந்தி போன்றோர் சந்தித்தாலும் ,கொண்ட கொள்கையை விடாமல் இருந்தாரே , அதுவும் பீஷ்மம்தான்.
அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரை, கண்ணன் நிலம் நோக்காது வானத்தையே முகம் நோக்கும்படி கிடத்தியது எதற்காக? குத்தி நின்ற அம்புகள் அவரை அசங்க விடவில்லை . மண்ணில் வீழ்ந்திருந்தால் ஆசை கிளர்ந்தெழுந்து,மீண்டும் மண்ணாளும் ஆசையை, வாழவேண்டும், என்ற ஆசையை அவருள் இந்த மண் புகுத்தியிருக்கும். அப்போது அவர் கொண்ட பீஷ்மம் தோற்றுவிடும், இதை தவிர்க்கவே கண்ணன் அவரை அம்பு படுக்கையில் படுக்க வைத்தான்.
பாமரர்களாகிய நாம் எல்லோரும் மண்ணில் பிறக்கிறோம். உறவுகளை பெறுகிறோம். பல உணர்வுகளோடே வாழ்கிறோம். மண் நம்மை ஆள்வது தெரியாமல் நாம் அதனை ஆள நினைப்பதால் தான் பல துன்பங்கள் வந்து சேர்கின்றன.
வளமையும், செழுமையும் கொடுக்கின்ற இந்த மண் நாம் அதன்மீது வாழும் வரை தான். எப்பொழுது இந்த உயிர் பிரிந்து மண்ணின் சம்பந்தம் இல்லாது ஆகாயத்தை எட்டுகிறதோ அப்போதே ஆசை மறைகிறது.
ஆகவே துன்பத்தை தவிர்க்க மண் கொடுக்கும் ஆசையை துறக்க பழக வேண்டும்.எண்ணங்கள் யாவும் ஆசையில்லா ஆடலரசனாகிய எம்பெருமானின் திருவடியை நோக்கியே இருக்க வேண்டும் .
Comments
Post a Comment