தேடலில் தெளிவு


தேடல் தொடங்கு முன்னரே நாம் எதை தேடப்போகிறோம்,எதற்காக தேடவேண்டும் என்பதில் தெளிவு பிறக்க வேண்டும்.தெளிவற்ற தேடல், பொன்னான நம் நேரத்தை வீணாக்குவதில் தான் முடியும். இதில் எஞ்சுவது ஏமாற்றமே!

இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் தேடல் உள்ளது.தேடல் இல்லாது  தெளிவுயில்லை.தேடல் பல விஷயங்களை நோக்கி நடக்கிறது.  சிலர் பொருளை தேடி அலைகின்றனர்.மற்றும் சிலர் பதவியையும்,புகழையும் தேடி ஓடுகின்றனர்.இவை கிடைத்தால் மகிழ்கின்றனர்.இல்லையெனில் சோர்வடைகின்றனர்.கிடைக்கப்பெற்றவர்கள்அதை தக்க வைத்துக்கொள்ள போராடுகின்றனர்,கிடைக்காதவர்கள் அதை பெறுவதற்கு போராடுகின்றனர். இப்படி தம் வாழ்க்கையைப் பேராட்டத்தில் கழித்து நிம்மதியில்லாமலேயே வாழ்ந்துவிடுகின்றனர். நிலையான நிம்மதியை பெற அறிவு இருந்தும் அதை பெற முயற்சிப்பதில்லை
இதில் எதை தேடினாலும் அத்தேடலுக்கான அறிவை கொடுப்பது இறைவன். இந்த அறிவானது நம் எல்லோருக்கும்
 பிறக்கும்போதே ஆண்டவனது கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்லமுறையில்பயன் படுத்துவதும்,பயன்படுத்தாதும் நம் கையில் தான் உள்ளது. நாம் கற்றவற்றை இறைவனின் வரமாக நினைத்து நாலு பேர்களிடம் பகிர்ந்தால் தான் இறைவன் மகிழ்வான். தேடல் தோன்றிமறையும் இவ்வுலக சுகங்களை நோக்கி இருக்கக்கூடாது.நிலையான சுகம் எதுவோ அதைநோக்கித்தான் இருக்க வேண்டும்.

மானுடராய் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையின் பயன் இறைவனை அடைவதே.இது எப்படி முடியும்? "அவனருளாளே அவன் தாள்" வணங்கினால் அவன் நமக்கு கொடுத்திருக்கும் மிகப் பெரிய கொடை"அறிவு" என்பது புரிய வரும்.

இந்த புரிதல் தான் தெளிவு.

இந்தஅறிவை ஆக்கத்திற்க்கு பயன்டுத்தினால் அது நமக்கு சொத்தாக அமையும்,அதுவே அழிவிற்கு பயன்படுத்தினால் துக்கமாக அமையும்.இது எப்படி? 

விஞ்ஞானம் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளது.இந்த கண்டுபிடிப்புகள் யாவும் மனிதனின்அறிவின்முயற்சியால்  நடந்தவை.கண்டுபிடிப்புகளை நல்லவற்றிக்கு பயன்படுத்தினால் பயன் உண்டு.நீங்களும் வளர்வீர்கள் மற்றவர்களும் வாழ்த்துவர். மாறாக அழிவிற்கு பயன் படுத்தினால் நீங்களும் அழிந்து ,மற்றவர்களும் அழிந்துபடுவர்.

உதாரணத்திற்கு தொலைதொடர்பு மின்ணனு சாதனங்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,தகவல் பரிமாற்றங்களுக்கு மிகவும் உதவியாகஉள்ளது.ராக்கெட்டால் சந்திரனிலும் கால் பதிக்கலாம்,கண்டம்விட்டுகண்டம் பாய்ந்து நாட்டையும் அழிக்கலாம். ஆகவே ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு ஆண்டவனின்ஆசீர்வாதம் என்றும் உண்டு.
"எப்பொருள் யார் யார் வாய்   கேட்பினும் 
அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு"

  இந்த அறிவு யாரால் கொடுக்கப்படுகிறது என்று ஆராய்ந்தால் அது "ஆண்டவனால்"என்றுதான் விடை கிடைக்கிறது. எந்தெந்த விஷயங்களை நாம்    செய்ய வேண்டும் என்று ,ஆசிரியர்கள்,குருமார்கள்,உற்றார்,உறவினர்கள் ,ஏன் இந்த பிரபஞ்சமும்  கூட கற்றுக்கொடுக்கிறது.  கற்றுகொடுப்பதை புரிந்துக் கொள்ள எது தேவை? அறிவு தான் தேவை.இது நாம் பிறக்கும் போதே ஆண்டவனால்  அருளப்படுகிறது என்றே சொல்லலாம். இதை புரிந்துகொள்வதற்கு நம் பிறப்பையே .எடுத்துக்கொள்ளுங்களேன்

குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பகத்தின்  காம்பை  அதன் வாயில் வைத்தவுடன் அது சப்பி தன் பசியை ஆற்றிக்கொள்கிறது.அதற்கு யாராவதுஇப்படி செய் என்று சொல்லி கொடுத்தார்களா ? இல்லையே! அதனால் தான் சுவாமி விவேகானந்தர் அறிவிற்கு விளக்கம் கொடுக்கும்போது,"knowledge is the perfection which is already in man" என்றார்.நடைபயிலுமுன் எதையாவதை பிடித்து கொண்டு எழுந்து நிற்க யார் கற்றுக்கொடுத்தார்கள்? ஒருவரும் இல்லையே!அப்படியிருக்க நம்முள்ளே இருக்கும் இந்த அற்புதமான அறிவை தகுந்த வழியில் உபயோகிக்காமல் வீணடிக்கலாமா?கூடவே,கூடாது. எந்தெந்த பருவத்தில் என்னென்ன கடமையை செய்ய வேண்டுமோ,அதைஅதை அந்தந்தபருவத்தில் செவ்வனே செய்ய வேண்டும்.இந்த அறிவைக் கொண்டு எது நல்லது எது ,கெட்டது  எது,என்று தெளிந்து விட்டால் தோன்றிமறையும் இவ்வாழ்க்கையை நாம் சந்தோஷமாக வாழ்ந்து அவன் தாளினை சேரலாம்.

"தீதும் நன்மையும் பிறர் தர வாரா" எல்லாம் நம் கையில்தான் உள்ளது என்ற தெளிவுவேண்டும்... .இன்பமோ,துன்பமோ,பதவியோ,பொருளோ,புகழோ நிலைத்து நிற்பதில்லை.  கற்ற கல்விக்  கூட மறதி என்னும் நோய் வந்தால் மறைந்துபோய் விடுகிறது.நமக்கு வாய்த்த துணையும் இறுதி வரை வருவதில்லை. இப்படி இருக்க நம்வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.எப்படி?

இவ்வுலகில் யாரும் சும்மா பிறப்பதில்லை. இறைவனின் ஆணைப்படி அவன் செயலை செய்யும் கருவிகளாக நாம் பிறக்கிறோம்.அதனை இந்த பூதவுடலின் துணை கொண்டு செய்வதால்,அதனை நன்கு பேணி பராமரிக்க வேண்டாமா?பராமரித்தல் என்றால் என்ன?

1)வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையாகாது  நோய்வாய்படாது  

இருத்தல்.

2)எப்போதும் சுறுசுறுப்பாய் இருத்தல்.

3)உடல் நலத்திற்கு பலம் சேர்க்கும் இயற்கை உணவுகளை அளவோடு உண்ணுதல்.

4)தகுந்த உடற்பயிர்சிகளை செய்து உடல்எடையை கட்டுக்குள் வைத்திருத்தல்.

5) மனோபலம் அதிகரிக்க இறைசிந்தனையில்மனதைவைத்து,தியானம் செய்தல்.

           பற்றற்று துறம் பூண்டு வீட்டு பொறுப்புகளில் இருந்து விலகுவதாலேயே தெளிவு கிடைக்காது.இல்லறத்தில் இருந்தாலும் பற்று வைக்காது உன் பணிகளை செய்துக்கொண்டு,மற்றவர்கள் உன்னை பின்பற்றுமாறு நடந்துக்கொண்டாலே நீ இறைவனை நெருங்கி விடலாம் என்ற தெளிவு கிடைக்க வேண்டும்.

ஆகவே மறைந்து போகும் இன்பங்களில் மனதை  செலுத்தாது,என்றும் நம்முள்ளே நிலைத்து நிற்கப்போகும் இன்பத்தை நோக்கி நம் தேடலை தொடங்க வேண்டும்.

முன்னை பழம் பொருளுக்கும் முன்னை  பழம் பொருளே!

பின்னே புது பொருளுக்கும் பெயர்த்துவம் பெற்றவனே!

நாம் பெற்ற அறிவினை நம்மை சுற்றியுள்ள நாலு பேருக்கு விளங்க வைத்து நம் ஈசனின் அருள் கிடைத்து உய்வோமாக!

                     

Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........